நெல்லையை புயல்கள் தாக்குவதேயில்லை ஏன்.?
நெல்லையை புயல்கள் தாக்குவதேயில்லை ஏன்.?
-----------------------------------------------------------------------------மழைக்காலங்களில் வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் தென்னிந்திய தீபகற்பத்தை சுருட்டி எறிவதில் தவறுவது இல்லை. நமக்கு விவரம் தெரிந்த நாட்களில் இருந்து நீலம்,தானே,வார்தா,ஒக்கி, கஜா என அதிதீவிர புயல்கள் நம் தமிழ்நாட்டில் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டுச் சென்றுள்ளன. மேற்கண்ட புயல்கள் பெரும்பாலும் வட மாவட்டங்களையே குறிவைத்து தாக்குகின்றன. விதிவிலக்காக 2017ம் ஆண்டு ஒக்கி புயல் நம் குமரியை ஓங்கி அறைந்து விட்டுச் சென்றது.
நெல்லை அந்த லிஸ்டில் இல்லை:
மழைக் காலங்களில் பெரும் புயல்கள் உருவாகும் போதெல்லாம் அது கரையை கடக்கும் மாவட்டங்களில் நம் திருநெல்வேலி இடம் பெற்றதேயில்லை. தமிழ்நாட்டில் கடலோர மாவட்டமாக நாம் இருந்தாலும் நாம் இருக்கும் இடம் இயற்கையிலேயே பாதுகாப்பு மிகுந்தது.
நெல்லையை காக்கும் இலங்கை:
ஆழியின் ஆர்ப்பரிப்பில் இருந்து நம் நெல்லையை காப்பது வேறுயாருமில்லை. நம் இலங்கை தான். வங்காள விரிகுடாவின் தென் பகுதியில் தென்தமிழக கடற்பகுதிக்கு நேரெதில் இலங்கைத் தீவு அமைந்துள்ளது. இதனால் வங்கக் கடல் பகுதி பிளவு பட்டு மன்னார் வளைகுடா(பொருநை வளைகுடா) என்ற பகுதி இடம்பெற்றுள்ளது. அதன் கரையோரத்தில் தான் நெல்லை தூத்துக்குடியின் கரையோர பகுதிகள் அமைந்துள்ளன. வங்கக் கடலின் சீற்றத்தை விட இந்த பகுதிகளில் கடலின் சீற்றம் குறைவாகவே இருக்கும். இதனை ராமேஸ்வரத்திலும், தூத்துக்குடியிலும் நாம் உணரலாம். இப்படி கடலுக்கு நடுவே இலங்கை அமைந்துள்ளதால் எந்த புயலும் நம் நெல்லையை நேரடியாக தாக்க வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது. இதனை சுனாமி வந்த போதும் நாம் உணர்ந்தோம்.!
கடந்த 2004ம் ஆண்டு இந்தியாவின் சோழ மண்டல கடற்கரை முழுதும் ஆழிப்பேரலையால் ஆவேச தாக்குதலுக்கு உள்ளான போது இங்கே நம் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி நம்மை காப்பாற்றியது.
மேற்கில் காக்கும் பொதிகை மலை:
கிழக்கே இலங்கை தீவு நம்மை காக்கிறது என்றால், மேற்கில் உயர்ந்த சிகரமான அகத்தியர் மலை நம்மை காக்கிறது. கேரளத்தில் வீசம் தென்மேற்கு பருவக்காற்றின் கோரத்தாண்டவம் நம் மீது நிகழாமல் இருக்க மேகங்களை தடுத்து மழைநீரை மட்டும் தருகின்றன இந்த மலைகள்.
கடந்த ஆண்டு ஒக்கி புயலில் இருந்து நெல்லை மாவட்டத்தை காப்பாற்றியது இந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் தான். பாவம், அதனால் குமரி மாவட்டம் சிக்கிச் சின்னாபின்னமானது.
தொல்லையில்லாத நெல்லை.!
இப்படி சுற்றிலும் எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் இயற்கை நம் நெல்லையை வேலி அமைத்து பாதுகாக்கிறது. இதனால் தான், உலகின் மூத்த குடியும், மூத்த மொழியும் காலங்கள் கடந்து நம் மண்ணில் நிலைப்பெற்றுள்ளன.!
நெல்லையை அழிக்க இயற்கைக்கும் மனமில்லை.!
No comments