Current affairs ஓபிசி 27% இடஒதுக்கீடு:

 ஓபிசி 27% இடஒதுக்கீடு: மருத்துவ படிப்புகளுக்கு இந்த ஆண்டே அமல் - யார் கொடுத்த அழுத்தம்?



எம்பிபிஎஸ், பல் மருத்துவம், மருத்துவ மேல்படிப்புகள் போன்றவற்றுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதலே இந்த இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று அரசு கூறியிருக்கிறது.


இதில் பிற பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீதமும் இடஒதுக்கீடு செய்யப்படும் என்று இந்திய சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.


இந்த முடிவை மைல்கல் நடவடிக்கை என்று அழைக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்புகளைப் பெறவும், நாட்டின் சமூக நீதியின் புரிய கட்டத்துக்கு செல்லவும் உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.


தற்போதைய நடைமுறையின்படி, மாநிலங்களில் உள்ள அரசு நடத்தும் மருத்துவ கல்லூரிகள், மத்திய தொகுப்புக்கு என அவற்றின் 15 சதவீத இடங்களை இளநிலை படிப்புக்கும், 50 சதவீத இடங்களை மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேல்படிப்புக்கும் வழங்கிட வேண்டும். இந்த மத்திய ஒதுக்கீடு இடங்கள்தான் மத்திய தொகுப்பு (சென்ட்ரல் பூல்) என அழைக்கப்படுகிறது.


இதுநாள்வரை நீட் எனப்படும் தேசிய தகுதிகான் நுழைவுத்தேர்வில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இனி பிற பிற்படுத்தப்பட்டோரும் இடஒதுக்கீடு சலுகையை பெறுவர்.


உச்ச நீதிமன்றம் வழிவகுத்த தொடக்கம்


மருத்துவ படிப்புகளில் எந்த மாநிலத்தவரும் தான் பிறந்த மாநிலம் அல்லாத வேறு மாநிலத்துக்கு சென்று படிக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க அகில இந்திய இடஒதுக்கீடு முறை 1986ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.


தொடக்கத்தில் இந்த அகில இந்திய ஒதுக்கீடு 2007ஆம் ஆண்டுவரை எவ்வித இடஒதுக்கீடும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டன. பிறகு பட்டியலினத்தவர்களுக்கு 15 சதவீதம், பழங்குடியினருக்கு 7.5 சதவீதம் என்று அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒதுக்கீடு அளவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தது.


இந்த நிலையில், 2007ஆம் ஆண்டில் மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டம் 2007இல் நடைமுறைக்கு வந்தபோது, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய கல்வி நிறுவனங்களான சஃப்தர்ஜங் மருத்துவமனை, லேடி ஹாரிங்டன், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், பனாரஸ் பல்கலைக்கழகம் போன்றவற்றில் மத்திய அரசு அமல்படுத்தியது. எனினும் இதே முறை, மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் கடைப்பிடிக்கப்படாமல் இருந்தது.


கடந்த ஜூலை 12ஆம் தேதி நீட் தேர்வு தொடர்பான அறிவிப்பை இந்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தபோதும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு இல்லாமலேயே தேர்வு நடைபெறும் என்று கூறியிருந்தார். இதனால், பல மாநிலங்களில் மாணவர்கள், அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்து வந்தனர்.


இந்த விவகாரம் தொடர்பாக அவ்வப்போது பிரதமர் நரேந்திர மோதியிடம் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள் தொடர்ந்து விவாதித்து வந்தனர். கடைசியாக கடந்த புதன்கிழமை கூட தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்துப் பேசினர். அவர்களின் சந்திப்புக்கு மறுநாளான இன்று மருத்து படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின்கீழ் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.


இந்த அறிவிப்பு வெளிவந்தவுடனேயே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலங்களவை திமுக உறுப்பினர் வில்சன், "பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்க தங்களுடைய கட்சி மேற்கொண்ட சட்ட முயற்சிகளை பட்டியலிட்டார். ஒவ்வொரு கட்டத்திலும் இடஒதுக்கீடு வழங்காமல் அப்போது மத்தியில் இருந்த அரசுகள் தாமதப்படுத்தியபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை சுட்டிக்காட்டியும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தும் போராடித்தான் இந்த முடிவை மத்திய அரசு எடுக்க தூண்டியிருக்கிறது," என்று தெரிவித்தார்.


இது முதல் கட்ட வெற்றிதான். தற்போது 27 சதவீத இடஒதுக்கீடு மட்டுமே வழங்கினார்கள். பட்டியலினத்தவருக்கு 15 சதவீத ஒதுக்கீ கொடுத்துள்ளனர். ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு அளவு குறைவுதான். அதை அதிகரிக்க தொடர்ந்து திமுக போராடும்," என்றும் வில்சன் தெரிவித்தார்.


மாநிலங்களவை பாமக உறுப்பினரான அன்புமணி ராமதாஸ், மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்கான பா.ம.க.வின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.