Current affairs எம்மா மெக்கியோன்: ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை

 எம்மா மெக்கியோன்: ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் - உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை



ஒரு மனிதர் ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்வதே பெரும் சாதனைதான். ஆனால் இந்த டோக்யோ ஒலிம்பிக்கில் ஒரு வீராங்கனை மட்டும் ஏழு பதக்கங்களை வென்று மொத்த உலகை மலைக்க வைத்திருக்கிறார். அவர் பெயர் எம்மா மெக்கியோன்.


ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனையான இவர், டோக்யோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் ஏழு பதக்கங்களைக் குவித்திருக்கிறார்.


ஏழு பதக்கங்கள் வென்ற எம்மாவின் சாதனை பற்றிய ஏழு முக்கிய தகவல்கள் இதோ.


1. 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 4 * 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே, 4 * 100 மீட்டர் மிட்லே ரிலே என நான்கு போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 100 மீட்டர் பட்டர்ஃப்ளை, 4 * 200 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே, கலப்பு 4 * 100 மீட்டர் மிட்லே ரிலே ஆகிய போட்டிகளில் வெண்கலம் வென்றுள்ளார்.


2. ஒரு பெண் வீராங்கனை ஒரே ஒலிம்பிக்கில் ஏழு பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை என்கிறது ஏ.எஃப்.பி செய்தி முகமை.


3. இதுவரையான ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியா 14 தங்கத்துடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. இதில் நான்கு தங்கத்தை எம்மா மெக்கியோன் மட்டும் வென்று கொடுத்திருக்கிறார்.


4. உலகிலேயே, ஒரே ஒலிம்பிக் போட்டியில் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற நான்காவது பெண்மணி இவர்தான் என்கிறது இ.எஸ்.பி.என் வலைதளம்.


5. ஆஸ்திரேலியாவின் இயான் தார்ப் மற்றும் லீசல் ஜோன்ஸ் ஆகியோர் தலா 9 ஒலிம்பிக் பதக்கங்களைப் வென்ற சாதனையையும் முறியடித்திருக்கிறார் எம்மா மெக்கியோன்.


6. டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற நான்கு தங்கம் மற்றும் மூன்று வென்கலத்தோடு, கடந்த 2016 ஒலிம்பிக் போட்டியில் வென்ற ஒரு தங்கம், இரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை எம்மா மெக்கியோன் வென்றுள்ளார் என்கிறது இ.எஸ்.பி.என்.


7. பதக்கங்கள் போக, இரு ஒலிம்பிக் சாதனைகளை படைத்து இருக்கிறார். 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் 23.81 நொடிகள் எனவும், 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் 51.96 நொடிகள் என இரு ஒலிம்பிக் சாதனைகளைப் எம்மா மெக்கியோன் படைத்திருக்கிறார் என்கிறது ஒலிம்பிக்ஸ் வலைதளம்.

No comments

Powered by Blogger.