CURRENT AFFAIRS தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பெரும் தியாகம் புதிய கல்விக் கொள்கை: பிரதமர் மோடி பெருமிதம்
தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பெரும் தியாகம் புதிய கல்விக் கொள்கை: பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியாவின் புதிய தேசியக் கல்விக் கொள்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பெரும் தியாகத்தின் முக்கியக் காரணிகளில் ஒன்று என நம்புவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் சார்பில் 2019-ல் கஸ்தூரி ரங்கன் கல்விக் குழு தாக்கல் செய்த கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து 2020-ல் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை, கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இதற்குப் பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதிலும், மத்திய அரசு அதை நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தி வருகிறது.
இன்று (ஜூலை 29) புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு ஆகிய நிலையில், அதன் அமலாக்கம் மற்றும் அம்சங்கள் குறித்துப் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
அப்போது அவர் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துக் கூறியதாவது:
’’இந்தியாவின் புதிய தேசியக் கல்விக் கொள்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான பெரும் தியாகத்தின் முக்கியக் காரணிகளில் ஒன்று என நம்புகிறேன். தேசியக் கல்விக் கொள்கையின் பலன்களை அறுவடை செய்யும் தலைமுறை நம் தேசத்தை வழிநடத்தும்.
வித்ய ப்ரவேஷ்
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுத் திட்டம், நமது இளைஞர்களை எதிர்கால நோக்குடையதாகவும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருளாதாரத்துக்கான பாதையையும் ஏற்படுத்தும். 1-ம் வகுப்பு மாணவர்களுக்கு விளையாட்டுகள் அடங்கிய 3 மாதக் கல்வித் திட்டமான வித்ய ப்ரவேஷ் உலகளாவிய திட்டமாக மாற்றப்படும். இதன்மூலம் கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகளுக்கும் தடையின்றிக் கல்வி கிடைக்கும்.
அகாடமி ஆஃப் கிரெடிட்
பல்வேறு உயர் கல்விகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை டிஜிட்டல் முறையில் சேமிக்க அகாடமி ஆஃப் கிரெடிட் என்ற வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பல்வேறு நிலைகளில் பெறும் மதிப்பெண்கள் அவர்களின் கல்வியாண்டின் இறுதியில் சேர்க்கப்படும்.
உயர் கல்வியை சர்வதேச தரத்தில் மேற்கொள்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. பல தசாப்தங்களாக ஒருவர் நன்றாகப் படிக்க வேண்டுமெனில் வெளிநாடு செல்லவேண்டும் என்று நம்பப்பட்டு வருகிறது. ஆனால் இனி சிறப்பான படிப்புகளுக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவார்கள். சிறப்பான கல்வி நிறுவனங்கள் இந்தியா வரும். இது விரைவில் நடக்கப் போகிறது.
பொறியியல் படிப்புகளை மொழிமாற்றம் செய்ய பிரத்யேகக் கருவி
பொறியியல் படிப்புகளில் பிராந்திய மொழிகள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் வங்காள மொழிகளில் 8 மாநிலங்கள் 14 பொறியியல் கல்லூரிகளில் படிப்புகளைத் தொடங்க உள்ளன. 11 இந்திய மொழிகளில் பொறியியல் படிப்புகளை மொழிமாற்றம் செய்யவும் பிரத்யேகக் கருவி தயாரிக்கப்பட்டுள்ளது.
சைகை மொழி
முதல் முறையாக இந்திய சைகை மொழிக்கு, மொழிப் படிப்புக்கான தகுதி வழங்கப்பட்டுள்ளது. சைகை மொழியை மாணவர்கள், ஒரு மொழிப் பாடமாகவே படிக்க முடியும். இதன் மூலம் நம்முடைய மாற்றுத்திறனாளி சகோதரர்கள் சிறப்பாகப் பயன்பெறுவர்’’.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
No comments