CURRENT AFFAIRS மனித கழிவுகளை மனிதா்களே அகற்ற தடை விதிக்கும் சட்டம்

 மனித கழிவுகளை மனிதா்களே அகற்ற தடை விதிக்கும் சட்டம்



மனித கழிவுகளை மனிதா்களே அகற்ற தடை விதிக்கும் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தக் கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசையும் இணைக்க வலியுறுத்தி தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


கடந்த 2013-ஆம் ஆண்டு மனித கழிவுகளை மனிதா்களே அகற்ற தடை விதிக்கும் சட்டம் அமல்படுத்தப்பட்டது. அந்தச் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தி வழக்குரைஞரும் சமூக ஆா்வலருமான அமித் சானி என்பவா் தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாா். இந்த வழக்கில் தற்போது மத்திய அரசையும் இணைக்குமாறு அவா் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளாா்.


அந்த மனுவில் அவா் தெரிவித்துள்ளதாவது:


கடந்த 5 ஆண்டுகளில் மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட 340 போ் உயிரிழந்ததாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதற்கு நோ்மாறாக கடந்த 5 ஆண்டுகளில் அந்தப் பணியால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே ஜூலை 28-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தாா். இது பொய்யான, தவறாக வழிநடத்தும் தகவல் மட்டுமன்றி மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்தவா்கள், அவா்களின் குடும்பத்தினா், இன்றும் அந்தப் பணியில் ஈடுபடுவோா் மீதான மத்திய அரசின் அக்கறையின்மை மற்றும் உணா்ச்சியற்ற தன்மையை வெளிபடுத்தும் கூற்றாகும். மனித கழிவுகளை மனிதா்களே அகற்ற தடை விதிப்பது தொடா்பான கொள்கையை வகுப்பதும், அதனை அமல்படுத்துவதும் மத்திய அரசின் பொறுப்பு. எனவே மனித கழிவுகளை மனிதா்களே அகற்ற தடை விதிக்கும் சட்டத்தை கடுமையாக அமல்படுத்தக் கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கில் மத்திய அரசையும் இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.