Arunagirinathar life story அருணகிரி நாதரின் வாழ்க்கை வரலாறு முருகப் பெருமானின் திருவிளையாடல்

Arunagirinathar life story அருணகிரி நாதரின் வாழ்க்கை வரலாறு முருகப் பெருமானின் திருவிளையாடல்



 15ம் நூற்றாண்டில் சைவ, வைணவப்பூசல் ஓங்கியிருந்தபோது, திருவண்ணாமலையில் பிறந்தவர் அருணகிரிநாதர். இவர் திருப்புகழ் என்னும் இனிய நூலை இயற்றியவர். இவர் கி.பி 1450ல் பிரபுதேவ மகாராஜா ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர் என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்துவந்த தவயோகியான திருவெண்காடாருக்கும், முத்தம்மைக்கும் முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இவளுக்கு ஆதிலட்சுமி என்று பெயர். முத்தம்மைக்கு முருகக் கடவுள் மேல் அபார பக்தியாதலால், முருகப் பெருமானின் திருப்பாதங்களே சரண் என்று வாழ்ந்து வந்தாள். முருகன் கோயிக்குப் போவதிலும் முருகன் திருநாமத்தை ஜபிப்பதிலும் முருகக் கடவுளுக்குப் பூமாலை கட்டித் தருவதிலும் ஒருநாளும் அவள் தவறியதில்லை. இதென்ன அதிசயமடி இப்படி முருகப் பித்துப் பிடித்துத் திரிகிறாளே இவள்! வள்ளி இவள் மேல் கோபம் கொள்ளப் போகிறாள் பார்! என்று சக பெண்கள் அவளைக் கேலி செய்வதுண்டு. எந்தக் கேலியையும் கிண்டலையும் பொருட்படுத்தாமல் முத்தம்மையின் முருக பக்தி தொடர்ந்து வந்தது. இவளுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தாலும், முருகப் பெருமான் மேல் பக்தி செலுத்தும் ஓர் ஆண்மகவு வேண்டும் என்று நாள்தோறும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்.முத்து செய்து வந்த தொடர் பிரார்த்தனைகளுக்கு அருள வேண்டும் என முருகன் திருவுள்ளம் கொண்டான். மூத்தபெண் ஆதிக்கு நான்கைந்து வயதாக இருக்கும் போது முத்துக்கு இரண்டாவது குழந்தையாக அருணகிரி என்ற ஆண்குழந்தையை ஆனிமாத மூல நட்சத்திரத்தில் அருளினான் முருகன். ஆண்மகவு பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தாள் முத்து. அந்தக் குழந்தையைச் சீராட்டிப் பாராட்டிப் பாலூட்டித் தாலாட்டி வளர்ப்பதில் அவள் செய்த அமர்க்களங்கள் திருவண்ணாமலையையே குலுங்கச் செய்தன. அப்படியொரு பாசம் தன் பிள்ளை மேல் அவளுக்கு. குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் காசியாத்திரை கிளம்பினார் திருவெண்காடர். யாத்திரை முடித்து அவர் வெகுகாலம் திரும்பி வரவில்லை காசியிலேயே தங்கி விட்டதாகக் கருதினாள் முத்தம்மை. அத்துடன் விரைவிலேயே கடுமையாக நோய்வாய்ப்பட்டாள் முத்தம்மை. எனவே முத்தம்மைக்கு ஆண்குழந்தை பிறந்த மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்கவில்லை. இந்த நிலையில் முத்தம்மை திருவண்ணாமலைக்கு வந்து விட்டாள். ஒருநாள் தனக்கு நோய் முற்றி மரணம் நெருங்குவதை அறிந்துகொண்ட அவள் தன் மகள் ஆதியை அன்போடு அழைத்தாள்: மகளே! எந்த வேளையில் உனக்கு ஆதி என்று பெயர் வைத்தேனோ? ஆதி முதல் அந்தம் வரை இந்தக் குடும்பப் பொறுப்பு முழுவதும் உன் தலையில் விழுந்திருக்கிறது அம்மா! நான் சேர்த்துவைத்துள்ள சொத்துகள் உன் வாழ்வைப் பாதுகாக்கும். நீ பாதுகாக்க வேண்டியது உன் தம்பியை. தவமாய்த் தவமிருந்து பெற்ற பிள்ளை. நீ அவன் மனம் நோகாமல் அவனை வளர்த்துவா. நீயே சிறுமி. உன்னிடம் இந்தப் பிஞ்சுக் குழந்தையை ஒப்படைக்கிறேன். இவனை முருக பக்தனாகப் பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் என்ன? நான் இறந்தாலும் வானிலிருந்து அவன் வளர்ச்சியையும் பக்தியையும் பார்த்து மகிழவே செய்வேன். நீ இவனை நன்றாக வளர்ப்பாய் என்ற நம்பிக்கை எனக்குண்டு என்று கூறிய முத்தம்மை, அருணகிரியின் கையைப் பற்றித் தன் மகள் ஆதியின் கரத்தில் வைத்தாள். முத்துவின் விழிகளிலிருந்து முத்து முத்தாய்க் கண்ணீர் வழிந்தது. ஒரு பெருமூச்சோடு முருகா என்று உரத்து முருகன் நாமத்தை ஜபித்தாள். மறுகணம் மயில்மேல் அமர்ந்து முருகன் அவள் உயிரை ஏற்க ஓடோடி வரும் காட்சி அவள் கண்ணுக்கு மட்டும் தெரிந்தது. பெண்ணே, நான் உன்னையும் ஆட்கொள்வேன். உன் மகன் அருணகிரியையும் பின்னாளில் ஆட்கொள்வேன்! என்று சிரித்தவாறே வாக்குறுதி தந்தான் வேலவன். முத்துவின் முகத்தில் அவளது முத்துப் பற்கள் தெரிய ஒரு மோகனப் புன்னகை மலர்ந்தது. அழிவே இல்லாமல் அந்தப் புன்னகை முகத்தில் உறைய முத்து முக்தியடைந்தாள். சின்னஞ்சிறு வயதிலேயே தாய் என்ற உறவு தங்கள் இருவரையும் விட்டு விலகியதை எண்ணித் துயருற்ற சிறுமி ஆதி, கன்னத்தில் வழிந்த கண்ணீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டாள். தன் தாய் தனக்கிட்ட கட்டளையை எந்தக் குறைபாடுமின்றி நிறைவேற்றுவதென உறுதி கொண்டாள். அருணகிரியை வாரியெடுத்து முத்தமிட்டுத் தன்னோடு அணைத்துக் கொண்டாள். தம்பி, உனக்குத் தாயில்லை என்று நினைக்காதே. எனக்குத்தான் தாயில்லை. உனக்கு இனி நானே தாய். அவள் உள்மனம் சிறு வயதிலேயே தனக்கு ஒரு மகன் கிடைத்தாக எண்ணிப் பெருமிதம் கொண்டது. ஆதி தன் தம்பியை வளர்க்கும் அழகைப் பார்த்துத் திருவண்ணாமலையே வியந்தது. அவனை நீராட்டுவது, அலங்கரிப்பது, அவனுக்குச் சோறூட்டுவது என ஒரு தாய் செய்யும் எல்லாச் செயல்களையும் சிறுவயதிலேயே தன் தம்பிக்குச் செய்தாள் ஆதி. தாய் இறக்கும்போது தன்னிடம் ஒப்படைத்த பொக்கிஷமாக அவள் தன் தம்பியைக் கருதினாள். தம்பியை வளர்த்தவாறே கூடவே அந்தத் தமக்கையும் வளர்ந்தாள். அருணகிரிநாதர் இளமையிலேயே தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் கற்றார். ஆனால் அதிகச் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் வீணாய்ப் போவதும் எங்கும் உள்ளதுதானே? அருணகிரி வீணாய்த்தான் போனான். குடி, சீட்டு என எல்லாக் கெட்ட பழக்கங்களும் அவனையே சரண் என்று வந்து குடிபுகுந்தன. அவனும் அவற்றை ஒரு கணமேனும் விட்டுப் பிரியாது ஆதரித்து வந்தான். அவன் வாலிப வயதை அடைந்தபோது அவனைச் சுற்றியிருந்த நண்பர்களில் ஒரு யோக்கியனைக் கூடக் காணோம். முத்தம்மை சேர்த்து வைத்திருந்த சொத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கரைய ஆரம்பித்தது. ஆதி ரகசியமாக மறைத்துவைத்திருந்த தங்க நகைகளெல்லாம் திடீர் திடீர் என்று வீட்டை விட்டு மாயமாய் மறைந்தன. அருணகிரி தான் அவற்றை எடுக்கிறான் என்பதை அறிந்துகொண்ட ஆதி, அவ்வளவு பணத்தை வைத்துக் கொண்டு அவன் என்னதான் செய்கிறான் என மலைத்தாள். ஒருநாள் இரவுநேரத்தில் மிகத் தாமதமாக வீட்டுக்கு வந்து கதவைத் தட்டிய அருணகிரியைச் சலிப்போடு பார்த்தாள் அவன் அக்கா ஆதி. எங்கே சென்று வருகிறாய்? எனக் கண்டிப்புடன் கேட்டாள். குழறிய குரலில் அக்கா..! நம் குலமே கணிகையர் குலம். நம் குலத்தைச் சார்ந்த கணிகையரை நாம் ஆதரிக்கவில்லையென்றால் வேறு யார் ஆதரிப்பார்கள்? அதனால் ஒவ்வொரு கணிகையையும் ஒவ்வொரு நாள் ஆதரித்து வருகிறேன்! என்று சொல்லியவாறே அருணகிரி குடிமயக்கத்தில் கீழே சாய்ந்தான். ஆதியின் மனமும் சாய்ந்தது. முருகா! என் தாய் முத்தம்மை, உன் பக்தனாக அருணகிரி வளர வேண்டும் என்று விரும்பினாளே? என் தாய் விரும்பியபடி என் தம்பியை என்னால் வளர்க்க முடியவில்லையே! நான் எங்கே தவறு செய்தேன், எப்படித் தவறு செய்தேன் என்று தெரியவில்லையே? முருகன் படத்திற்கு முன் நின்று அவள் கண்ணீர் விட்டுக் கதறினாள். தன் தம்பி மேல் உள்ள தாளாத பாசத்தால், தரையில் விழுந்து கிடந்த அவனை எழுப்பி உணவளித்து உறங்கச் செய்தாள். ஆனால் அவள் கண்கள் தம்பியைப் பற்றிய தீராக் கவலையில் உறக்கத்தை மறந்தன. படத்திலிருந்த முருகன் சிந்தித்தான். அருணகிரியைப் பொறுத்தவரை முருகனுக்கும் ஒரு பொறுப்பு உண்டே? வேலை வணங்குபவர்களுக்கு அருள்புரிவதைத் தவிர அவனுக்கு வேறென்ன வேலை? கந்தனை மட்டுமே சிந்தனை செய்து வாழ்ந்த முருக பக்தையும் அருணகிரியின் தாயுமான முத்தம்மைக்கு அவள் இறக்கும் நேரத்தில் அருணகிரியைத் தன் அடியவனாக்குவதாக முருகப் பெருமான் வாக்குறுதி கொடுத்தானே? அந்த வாக்குறுதியை முருகன் மீற முடியுமா?

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋



தன் தந்தை சிவன் நடத்திய திருவிளையாடல் போல் குமரன் தானுமொரு திருவிளையாடல் நடத்த முடிவுசெய்தான். அதற்கு அவன், அருணகிரியின் தமக்கை ஆதியையே மையமாக்கி ஒரு திட்டம் வகுத்தான்.. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அருணகிரியின் வாலிப லீலைகள் தொடர்ந்தன. அருணகிரி வாழ்ந்த திருவண்ணாமலையில் அவன் அறியாத கணிகை என்று யாரும் இருக்கவில்லை. பொன்னையும் பொருளையும் லட்சியமே இல்லாமல் வாரி இறைக்கும் அவனது வருகைக்காக கணிகையர் காத்துக் கிடந்தனர். காசில்லாதவன் யாராயிருந்தாலும் கதவைச் சாத்துபவர்கள் அல்லவா தாசிகுலப் பெண்கள்? எனவே, இரவு தொடங்கிவிட்டால் காசு காசு என்று பரபரத்தது அருணகிரியின் மனம். என்ன செய்வது? அக்காவுக்குத் தெரியாமல் சொந்த வீட்டிலேயே திருடலானான். அவன் தாய் முத்தமை சேர்த்து வைத்திருந்த வைர அட்டிகைகளும் தங்க வளையல்களும் முத்து மோதிரங்களும் நவரத்தின ஆபரணங்களும், வீட்டிலிருந்து திடீர் திடீரென மாயமாய் மறையைத் தொடங்கின. யாரும் அறியாமல் எந்தப் பறவை இவற்றையெல்லாம் வீட்டுக்குள்ளே புகுந்து தூக்கிச் செல்கிறது என்று ஆதி தொடக்கத்தில் அதிசயித்தாள். இரும்பு அலமாரியை இறுகப்பூட்டி, சாவியை ரகசிய இடங்களில் ஒளித்து வைக்கலானாள். தன் தம்பியிடம் எவ்வளவோ கெட்ட பழக்கம் இருந்தாலும் திருடும் அளவுக்கு அவன் மோசமானவன் அல்லன் என்று அவள் பெரிதும் நம்பியிருந்தாள். அவளது நம்பிக்கையின் தலையில் ஏற்கெனவே இடி விழுந்துவிட்ட செய்தியை அவள் நெடுநாட்கள் அறியவில்லை. அருணகிரி அந்த வீட்டின் மூலை முடுக்குகள் அனைத்தையும் அறிந்தவன் அல்லவா? அந்த வீட்டிலேயே வளர்ந்தவனாயிற்றே அவன்? அவன் கண்ணிலிருந்து சாவி எப்படித் தப்ப முடியும்? அக்கா வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து, தன் வீட்டுப் பொருளைத் தானே கொள்ளையடிக்கத் தொடங்கினான் அருணகிரி. தமக்கை ஆதி விழித்துக் கொள்வதற்குள் மொத்த சொத்தும் காலியாகியிருந்தது. உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிட்டால் மலையளவு செல்வம் இருந்தாலும் மளமளவெனக் கரையுமே? தீய வழியில் செலவு செய்யவும் தொடங்கினால் வறுமை உரிமையோடு வீட்டுக்குள் நுழைந்து சம்மணமிட்டு உட்கார்வதைத் தடுக்க இயலுமா? அக்கா ஆதியம்மை ஒருவேளைச் சோற்றுக்கும் வழியின்றி அல்லல் படத்தொடங்கினாள். தம்பியின் ஒழுக்கக் கேட்டால் விளைந்த கோபம் ஒருபுறம். என்றாலும் தானே தாயாய் இருந்து வளர்த்த தம்பிமேல் கொண்ட பாசம் ஒருபுறம். இருதலைக் கொள்ளி எறும்பாக அவள் மனம் செய்வதறியாது தத்தளித்தது. அக்கம்பக்கமெல்லாம் கடன் வாங்கித் தீர்த்தாகி விட்டது. இனிக் கடன் கேட்க யாருமில்லை. சமைத்துப் பல நாட்கள் ஆகிவிட்டன. அடுப்பில் பூனை உறங்கிக் கொண்டிருந்தது. பட்டினி வயிற்றைப் பசி நமநமவெனக் கிள்ளியது. ஆனால் தம்பி அருணகிரிக்கு எதைப் பற்றியும் எந்த அக்கறையும் இல்லை. தன் அக்காவிடம் பணத்தை எப்படியாவது கறந்து அதை தாசி வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்து சுகபோகங்களை அனுபவிப்பதில் மட்டுமே அவனுக்கு நாட்டம். அவனுக்குத் தேவையான பணத்தைக் கொடுக்க முடியவில்லை என்றால் அது அக்காவின் தவறு! உடன்பிறந்த தம்பிக்குப் பணம் கொடுக்காமல் அக்கா இருப்பதாவது? அதர்மமல்லவா அது?! இப்படித்தான் அவன் எண்ணப்போக்கு இருந்தது! இயற்கையில் சில விதிகள் உண்டே? அவற்றை யாரும் மீற இயலாது அல்லவா? அளவு கடந்து ஆட்டம் போட்டால் அதன் விளைவை உடல் காட்டத்தானே செய்யும்? உடல் தாங்கும் அளவையும் மீறி சுகபோகங்களில் ஆழ்ந்திருந்த அவனைப் பெருநோய் வந்து பற்றிக்கொண்டது. தன் அன்புத் தம்பியைத் தீராநோய் பீடித்திருப்பதைப் பார்த்து தமக்கை ஆதி அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. வீட்டில் கொடும் வறுமை. சம்பாதிக்காத தம்பி. அவன் இப்போது நோயாளி வேறு. என்ன செய்வேன் முருகா? என அவள் ஆழ்மனத்தில் கதறிக் கொண்டிருந்தாள். தொழுநோய் தொற்றிய பின்னும் பெண்ணாசை அருணகிரியை விட்டகலவில்லை. காசு கொண்டுவராத அருணகிரியை எந்தக் கணிகையும் தன் வீட்டில் சேர்க்கத் தயாராய் இல்லை. அதுவும் அவன் பிணியாளன் என்பதால் அதிகக்காசை எதிர்பார்த்தார்கள் அவர்கள். எனவே, நாள்தோறும் எனக்குப் பணம் கொடு! என்று அருணகிரி அக்காவை ஓயாமல் நச்சரிக்கலானான். இப்போது அருணகிரியின் குரல் ஓங்கத் தொடங்கியிருந்தது. வளர்ந்த தன் தம்பிக்கு அக்கா பயப்படலானாள். சோற்றுக்கே வழியில்லையே? இருந்த செல்வமெல்லாம் தான் கரைந்துவிட்டதே? அக்கம்பக்கங்களில் கடன் கேட்டல்லவா ஆதி வாழ்க்கை நடத்தி வருகிறாள்? அருணகிரியின் பழக்க வழக்கங்கள் வேறு அக்கம்பக்க வீடுகளில் பிரசித்தமாகி இருந்தன. ஒருநாள் இரவு அருணகிரி உடனடியாகத் தனக்குப் பணம் வேண்டும் என அக்காவிடம் அதட்டிக் கேட்டான். அவன் அடிப்பதற்குக் கை ஓங்கியதைப் பார்த்த அக்கா, அச்சத்தோடும் அழுகையோடும் வீட்டை விட்டு வெளியேறினாள். கொஞ்ச தூரம் நடந்து சென்று ஏதோ ஒரு வீட்டு வாசலில் நின்று கையேந்தினாள். ஏற்கெனவே அந்த வீட்டில் கடன் வாங்கியிருந்தாள் அவள். கொடுத்த கடனை இன்னும் அடைக்கவில்லை. அப்படியிருக்க மறுபடியும் அவள் கடன் கேட்டு வந்ததை அவர்கள் ரசிக்கவில்லை. என்றாலும் இரக்கம் அந்த வீட்டின் மாதரசியை உந்தித் தள்ளியது. கையில் கிடைத்த கொஞ்சம் அரிசியை எடுத்து ஆதியின் கரத்தில் இட்டாள் அவள். பிறகு சற்றே சலிப்படைந்த தொனியில், தம்பியின் வயிற்றுப் பசிக்குக் கடன் கேள் அம்மா. தருகிறேன். ஆனால் அவன் உடற்பசி தணியப் பணம் கேட்டு என் வயிற்றெரிச்சலைக் கிளறாதே! என்றாள். ஆதி அவமானம் தாளாதவளாய் கிடைத்த கொஞ்சம் அரிசியோடு மவுனமாக வீட்டுக்கு வந்துசேர்ந்தாள். தம்பியைத் தேடினாள். வீட்டில் தம்பியைக் காணோம். சாப்பிடாமல் எங்கே போனான்? கொஞ்சமாவது சாப்பிட்டு விட்டுப் போகக் கூடாதோ? கிடைத்த கொஞ்ச அரிசியைச் சமைக்கப் பாத்திரத்தைத் தேடினாள் ஆதியம்மை. வீட்டில் இருந்த பாத்திரங்கள் அனைத்தும் திடீரென மறைந்துவிட்டிருந்தன. மருந்துக்குக் கூட ஒரு பாத்திரத்தைக் காணோம். எல்லாப் பாத்திரங்களையும் ஒரு சாக்கில் போட்டு எடுத்துக் கொண்டுபோய் விற்றுவிட்டான் அருணகிரி. கிடைத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஏதோ ஒரு கணிகை வீடு தேடிப் போயிருந்தான். இதை அடுத்த வீட்டினர் சொல்லி அறிந்தபோது சோர்வோடு திண்ணையிலேயே காலோய்ந்து உட்கார்ந்தாள் ஆதி. நினைக்க நினைக்க அழுகை வந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது. கிடைத்த அரிசியை எப்படிச் சமைப்பது? அதற்குக் கூடப் பாத்திரமில்லையே? தன் அன்புக்குப் பாத்திரமான தம்பி இப்படி ஒரு பாத்திரம் கூட வீட்டில் இல்லாமல் துடைத்து எடுத்துக்கொண்டு போய்விட்டானே? அவள் நெஞ்சம் கழிவிரக்கத்திலும் பரிதவிப்பிலும் விம்மியது. தம்பி என்னதான் ஒழுக்கம் கெட்டவனாக இருந்தாலும் அவன் உடன் பிறந்த தம்பியல்லவா? தானாடா விட்டாலும் சதை ஆடுமே? அவனும் இன்னும் சாப்பிடவில்லையே என்றும் பரிதவித்தது அவளின் பாழும் மனம். வீட்டில் விளக்கேற்ற ஒரு சொட்டு எண்ணெய் கூட இல்லாததால் அவள் தீபம் ஏற்றாமல் தன் விதியை நொந்தவாறு வாயிலில் வீற்றிருந்தாள். பசியாலும் பட்டினியாலும் அவள் உடல் கடுமையாகச் சோர்ந்திருந்தது. அவள் வீட்டுக் கூடத்தில் படமாக மாட்டப்பட்டிருந்த முருகன் தன் திட்டத்தை எண்ணி உள்ளுக்குள் நகைத்துக் கொண்டான். கண்ணாடிச் சட்டமிட்டிருந்ததால் முருகனின் நகைப்புச் சத்தம் சட்டத்தைத் தாண்டி வெளியே கேட்கவில்லை. ஆதியின் விழிகளில் வற்றாத அருவியாகக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. தொலைவில் யாரோ வருவதை உற்றுப் பார்த்தாள். அது அருணகிரியேதான். அவன் தடதடவென்று கடும் கோபத்தோடு வந்தான். வீட்டிலிருந்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டுபோய் விற்கலாமா? சமைக்கக் கூடப் பாத்திரமில்லாமல் செய்து விட்டாயே? விம்மியவாறே கேட்டாள் ஆதி. ஆமாம். பொல்லாத பாத்திரம். பாத்திரங்களை விற்ற பணத்தைக் கொண்டுபோய்க் கொடுத்தேன். போதாது, இந்த இரவு என்னுடன் தங்கவேண்டுமானால் இன்னும் கொஞ்சம் பணம் கொண்டுவா! என்கிறாள், அந்தக் கணிகை. நீ ரகசியமாக எங்காவது பணம் வைத்திருப்பாயே? அதைக் கேட்டு வாங்கிப் போகத்தான் வந்தேன். எடு பணத்தை! உறுமினான் அருணகிரி. தன் அன்புத் தம்பியின் பேச்சைக் கேட்டு நொந்துபோன ஆதி, தீராப்பிணி வந்த பின்னும் அவன் திருந்தவில்லை என்பதை உணர்ந்து கொண்டாள். தன் வீட்டுக் கூடத்தில் மாட்டப்பட்டிருந்த முருகப் பெருமானின் படத்தையே சற்று நேரம் வெறித்துப் பார்த்தாள். இவன் உன் பக்தனாக வேண்டும் என்றல்லவா என் தாய் ஆசைப்பட்டாள்? பிறகு இவன் ஏன் இப்படி ஆனான்? முருகப்பெருமானிடம் ஆதியின் கண்கள் கேட்டன. முருகனின் அருட்பார்வை அவள் மேல் விழுந்தது. அருணகிரியைத் திருத்த வேண்டுமானால் சொல்லத் தகாத அந்த வாக்கியத்தை அவள் சொல்லத்தான் வேண்டும் என முருகக் கடவுள் அவள் மனத்திலிருந்து தூண்டினான். ஆதி ஒரு முடிவு செய்தாள். படத்தை விட்டுக் கண்ணைத் திருப்பிய ஆதி, தன் தம்பியை ஒரு கணம் உற்றுப் பார்த்தாள். பின் தன் பார்வையை எடுக்காமல் நிறுத்தி நிதானமாக முற்றிலும் அதிர்ச்சி தரத்தக்க அந்த வாக்கியத்தைச் சொன்னாள். அக்கா ஆதியைப் நோக்கி, இன்னும் கொஞ்சம் பணம் கேட்கிறாள் அந்தக் கணிகை. நீ ரகசியமாக எங்காவது பணம் வைத்திருப்பாயே? எடு பணத்தை! என்று உறுமினான் அருணகிரி. ஆதி, கூடத்தில் மாட்டப்பட்டிருந்த முருகன் படத்தையே வெறித்துப் பார்த்தாள். அருணகிரியைத் திருத்த வேண்டுமானால் சொல்லத் தகாத அந்த வாக்கியத்தை அவள் சொல்லித்தான் ஆக வேண்டும் என முருகன் அவள் மனத்திலிருந்து தூண்டினான். தம்பியை உற்றுப் பார்த்த ஆதி, அந்த முற்றிலும் அதிர்ச்சி தரத்தக்க வாக்கியத்தைச் சொன்னாள். என்னிடம் பணம் இல்லையப்பா! வேண்டுமானால் நான்தான் இருக்கிறேன்! என்றாள் விரக்தியுடன்! அதைக் கேட்ட அருணகிரியின் தலை கிறுகிறுவெனச் சுற்றியது. அவன் விக்கித்துப் போய் திண்ணையில் செயலோய்ந்து உட்கார்ந்தான். என்ன கொடுமை இது! இப்படியொரு வாக்கியத்தைக் கேட்கவா பிறப்பெடுத்தேன்? தாய் முத்தம்மை இறந்த பிறகு, தன்னைத் தாய்க்கும் மேலாகக் காத்த ஆதியம்மை அல்லவா இவள்? இவள் என் அக்கா மட்டுமல்ல; வளர்த்த தாய் மட்டுமல்ல; என் தெய்வமே அல்லவா? தன் சின்னஞ்சிறு வயதிலேயே என்னைத் தன் மகனாக ஏற்று எத்தனை சிரமப்பட்டு என்னை வளர்த்தாள்! நான் புத்திகெட்டுப் போனேனே! சேர்வார் சேர்க்கையால் மிருகங்களை விடக் கேவலமாக மாறினேனே? என்னைவிடக் கெட்டழிந்தவர்கள் புவியில் வேறு யார் இருக்கக் கூடும்? முருகன் அதற்குத் தண்டனையாகத் தொழுநோயைத் தந்த பிறகும் முருகக் கடவுளைத் தொழவேண்டும் என்று ஏன் எனக்குப் புத்தி வரவில்லை? இப்படியொரு வாக்கியத்தை என் அக்கா சொல்லுமளவு எந்தப் பிசாசு உடலின்பத்தில் வேட்கை ஏற்படுத்தி என்னைப் பிடரியைப் பிடித்து உந்தியது? கணிகை காசு! இந்த இரண்டு வார்த்தைகளைத் தவிர வாழ்வில் வேறென்ன தெரியும் எனக்கு? முற்பிறவியில் இவர் ஆற்றிய தவத்தின் பயனாக ஒரு பெரியவர் இவரை நல்வழியில் திருப்பிவிடக்கருதி அன்பனே ! மங்கையரின் மோக வலையிலிருந்து விடுபட்டு, குமரப் பெருமானை போற்றிப் பணிந்து, பேரின்பப் பெருவாழ்வை அடையும் மார்க்கத்தைப் பார் என்று உபதேசித்தார். இப்பெரியவர் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரே என்றும் கூறுகிறார்கள். அவர் செய்த புண்ணியம் கைகூடும் வேளை வந்தது. பல பிறவிகளில் இவர் முருக பக்தனாக, முருகனடிமையாக விளங்கியதினால் இவரது மனநிலையில் மாறுதல் ஏற்பட்டது. தமது தவறுகளை எண்ணி வருந்தினார். முருகனை நினைத்து வணங்கினார். என் தாய் முத்தம்மை காலமாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவளது அபரிமிதமான முருக பக்தியைப் பற்றி ஊரெல்லாம் பேசுகிறது. என் தாயின் முருக பக்தியில் ஆயிரத்தில் ஒரு பங்காவது எனக்கு இருக்கவேண்டாமா? முருகா! உன்மேல் பக்தி வந்திருந்தால் இந்த ஒழுக்கக் கேடான வாழ்க்கையை நான் வாழ்ந்திருப்பேனா? என்மேல் பாசம் வைத்த என் அக்காவுக்கு என்னால் எத்தனை துன்பங்கள்! நான் என் அக்காவை விட்டு விலகிச் செல்வதே நல்லது. இனியேனும் அவள் நிம்மதியாக வாழட்டும். அருணகிரியின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அவன் வீட்டை விட்டு நிரந்தரமாக இறங்கி வெளியில் நடந்தான். ஒரு கசந்த சிரிப்போடு அவனையே விரக்தியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் ஆதி. வீட்டை விட்டு வந்த அருணகிரிக்கு எங்கு செல்வதெனத் தெரியவில்லை. காசில்லாத அவனுக்கு எந்தக் கணிகை வீட்டிலும் நிரந்தரமாக இடம்கிடைக்கப் போவதில்லை. திக்குத் திசை புரியாமல் கால்போன போக்கில் நடந்தான்.



💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

திருவண்ணாமலை கோபுரம் வா வா என அவனை அழைப்பதுபோல் தோன்றியது. கோபுரத்தை நோக்கித் தன்னிச்சையாக நடந்தன அவன் கால்கள். செல்லும் வழியெல்லாம் பற்பல தாசி வீடுகள். அவன் பார்க்காத தாசி வீடா? அவர்கள் அவரவர் வீட்டு வாசலில் வாடிக்கையாளரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். காசில்லாத இவன் பிச்சைக்காரனைப் போல் நடந்துசெல்வத்தைப் பார்த்து அவர்கள் ஒருவருக்கொருவர் ஜாடை செய்து கிளுக் எனச் சிரித்தார்கள். அவர்களின் கேலிச் சிரிப்பு அருணகிரி காதுகளில் விழத்தான் செய்தது. ஏற்கெனவே நொந்திருந்த அவன் மனம் தாசிகளுடனான வாழ்வு இவ்வளவுதான் என்றறிந்து, மேலும் நொந்தது. தன்மேல் உயிரையே வைத்து தனக்காகக் காசை ஒரு பொருட்டாகக் கருதாத தன் அக்காவின் தூய பாசம் எங்கே? காசைத் தவிர வேறு சிந்தனையே இல்லாத இந்த தாசிகளின் அற்பமான மோகம் எங்கே? அக்காவின் உன்னதப் பாசம் தன்னை வளர்த்து ஆளாக்கி கோபுர உயரத்தில் ஏற்றியது. தாசிகளின் தொடர்போ தன்னை அதலபாதாளத்தில் தள்ளி, தனக்குத் தொழுநோயைத் தான் பரிசாகத் தந்தது. அவன் பின்னால் கணிகையரின் ஏளனச் சிரிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க, அவன் அதன் ஒலியில் கூனிக் குறுகி நடந்துகொண்டே இருந்தான். வா வா என்று தன்னை அழைத்த கோபுரத்தை நோக்கி நடந்தான். இனி இத்தனை அவமானங்களைச் சுமந்துகொண்டு வாழத்தான் வேண்டுமா என்று அவன் மனம் சிந்தித்தது. என் அன்னை முத்தம்மையின் மனத்தில் பக்தியை விதைத்த முருகா! என்னை ஏன் கைவிட்டாய்? சீரழிந்து கெட்டதெல்லாம் போதும். பாவம் செய்த இந்த உடல் இனி எனக்கு வேண்டாம். விறுவிறுவென நடந்து அண்ணாமலையின் கோயிலின் வல்லாள ராஜன் கோபுரத்தின் உச்சியில் ஏறினான் வாலிபன் அருணகிரி. வீட்டிலிருந்த அக்கா ஆதி சிறிதுநேரம் சிந்தித்தாள். தம்பி தளர்ந்த நடையோடு சென்றது அவள் கண்ணில் நின்றது. அவனுக்கு புத்தி வந்திருக்கும் என்றே நம்பினாள். ஆனால் அவன் முகத்தில் தென்பட்ட அதிர்ச்சியும் சோர்வும் அவளை யோசிக்க வைத்தன. ஏதாவது விபரீதமான முடிவுக்கு அவன் வந்துவிட்டால்? அவனை இழந்து அவளால் வாழ முடியுமா? திடீரென எழுந்த உணர்வெழுச்சியோடு அவன் மனத்தில் எழக்கூடிய முடிவை ஊகித்தவளாய் தம்பீ தம்பீ என்று கதறியவாறே அவள் திருவண்ணாமலைத் தெருக்களில் ஓடினாள். கோபுரத்தின் உச்சியைத் நோக்கித் தம்பி ஏறுவதைப் பார்த்தாள். தம்பீ வேண்டாம், என்னை விட்டுப் போய்விடாதே! என்று அலறியவாறே அதே கோபுரத்தை நோக்கி ஓடலானாள். அக்காவின் கூக்குரல் அவன் செவியில் விழுந்ததாய்த் தெரியவில்லை. விழுந்தாலும் அதை அவன் லட்சியம் செய்து தன் முடிவை மாற்றிக் கொள்வான் என்றும் தோன்றவில்லை. கோபுர உச்சியில் அவனைச் சுற்றி ஏராளமான தாசிகள் நின்று கைகொட்டிச் சிரிப்பதுபோல் பிரமை தோன்றியது அவனுக்கு. முருகா! என் அன்னை முத்தம்மைக்கு அருள்புரிந்த கடவுளே! என்னையும் ஏற்றுக்கொள்! என் எல்லாத் தவறுகளையும் மன்னித்துவிடு! என்றவாறே. ஆ! என் தம்பி என்ன செய்கிறான் இப்போது? கோபுரத்தின் மேலிருந்து குதித்தால் உடல் பொடிப்பொடி ஆகிவிடுமே? எலும்பு கூடக் கிடைக்காதே? முருகா! என் தாயான உன் பக்தை முத்தம்மைமேல் ஆணை! என் தம்பியைக் காப்பாற்று! ஆதி உரத்த குரலெடுத்து அலறினாள். அதற்குள் அந்த விபரீதம் நடந்தே விட்டது. அருணகிரி கோபுர உச்சியிலிருந்து சடாரெனக் குதித்தே விட்டான். கீழே விழும் எந்தப் பொருளையும் இழுக்கும் இயற்கையான புவிஈர்ப்பு விசை அவனையும் இழுத்தது. செங்குத்தாக அவன் மண்ணை நோக்கி விழுந்துகொண்டிருந்தான். 



அவன் மேனி தரையை எட்டித் தூள்தூளாகப் போகிற நேரம். இதென்ன! ஆயிரம் கோடி நிலவுகள் சேர்ந்தாற்போல் ஒரு குளுமையான வசீகர ஒளி வானில் தோன்றுகிறதே! அந்த ஒளி சரசரவென ஒருங்கிணைந்து பன்னிரண்டு தாமரைப் பூங்கரங்களாக மாறுகிறதே! அருணகிரி அந்த ஆச்சரியத்தை அனுபவித்தவாறே திகைத்திருந்தான். பன்னிரண்டு கரங்களும் அவன் தேகத்தை அப்படியே பூப்போல் தாங்கிக் கொண்டன. மெல்ல ஒரு சின்னச் சிராய்ப்பும் இல்லாமல் அவனை அவை பத்திரமாக மண்ணில் புல்வெளியில் கிடத்தின. பின்னர் அந்தக் கரங்கள் மீண்டும் ஒளியுருவம் பெற்று விண்ணில் மறைந்தன. முருகனின் பன்னிரு அருட்கரங்களால் தீண்டப்பெற்ற அருணகிரியை இனி நாம் அவன் என்று எப்படி அழைப்பது? முருகனது பக்தராக அருணகிரியார் புதுப்பிறவி எடுத்துவிட்டார். விழுந்த நிலத்திலிருந்து எழுந்து மண்ணைத் தட்டி விட்டுக் கொண்டார் அருணகிரிநாதர். தன் மேனியை வியப்போடு பார்த்துக் கொண்டார். முருகனைத் தொழுததால் அவரது தொழுநோய் முற்றிலுமாக மறைந்திருந்தது. அவரது மேனி முழுமையான ஆரோக்கியத்துடன் பொன்வண்ணத்தில் புதுப்பொலிவு பெற்று ஒளிவீசியது. என்னைக் காத்தருளிய கந்தா! எனக்குக் காட்சி தரலாகாதா? அவர் விம்மினார். அடுத்த கணம் ஓராறு முகமும் ஈராறு கரமும் கொண்ட கந்தக் கடவுள் கோலமயில் வாகனனாய் அவர் முன் தோன்றினான். ஜல் ஜல் எனக் கால் கொலுசுகள் ஒலிக்க, அவரை நோக்கி நடந்து வந்தான். அருணகிரிநாதரின் நெற்றியில் திருநீறு பூசினான். காதருகே வந்து சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரத்தை அவருக்கு உபதேசித்தான் ஆறுமுகன். அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையன் அன்று அருணகிரிக்கும் பாடம் சொன்னான். எங்கே நாக்கை நீட்டு எனச் சொல்லி, வேலால் அருணகிரியாரின் நாவில் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை எழுதினான். அன்பனே! இறப்பதென முடிவுசெய்தாய். அப்போதும் உன் அன்னை முத்தம்மையை நீ மறக்கவில்லை. அவளை நினைத்தாய். அன்னையை நினைப்பவர்களும் அன்னையின் மனம்கோணாமல் வாழ்பவர்களும் என் அருளைப் பெறத் தகுதி உடையவர்கள்! என் அன்னை உமையம்மை கொடுத்த சக்திவேலால் உன் நாவில் பிரணவத்தை எழுதியிருக்கிறேன். இனி அற்புதமாகக் கவிதை பாடும் சக்தி உனக்கு வரும். இனி உன் நாவிலிருந்து பக்தித் தமிழ் பொங்கிப் பெருகும். எங்கே என் பக்தையான உன் அன்னை முத்தம்மையின் பெயரில் முத்து எனத் தொடங்கி ஒரு பாடல் பாடு! முருகப்பெருமான் அருணகிரியைப் பாடல் பாடப் பணித்தான். அருணகிரியின் நாவிலிருந்து தமிழ்க் கவிதை கங்கையெனப் பொங்கிப் பெருகத் தொடங்கியது. முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சக்திச் சரவண முக்திக்கொரு வித்துக் குருபர! என்ற முதல் திருப்புகழ்ப் பாடல் துள்ளிக் குதித்துக்கொண்டு புறப்பட்டது. அதை முழுமையாய்க் கேட்டு மனம் மகிழ்ந்த முருகன் அவருக்கு ஆசி வழங்கி மறைந்தான். கண்ணீரோடு தன் தம்பியின் உடலைத் தேடி ஓடோடிவந்த அக்கா ஆதி, தம்பி முற்றிலும் புதியவனாய் மாறியிருக்கும் அந்த அதிசயத்தைக் கண்டாள். தொழுநோய் நீங்கிய புது உடலைப் பார்த்து வியந்தாள். விழிகளைத் துடைத்துக் கொண்டாள். வீட்டுக்கு வருமாறு வேண்டினாள். அருணகிரியார் கனிவுடன் தமக்கையைப் பார்த்தார். அந்தப் பார்வையே அல்லவா மாறிவிட்டது! இப்போதைய அவர் பார்வையில் அருள் பொங்கியது. அக்கா! நீ என் அக்கா மட்டுமல்ல. தாயும் கூட. அதுமட்டுமல்ல. நீ எனக்கு குருவும் ஆகிறாய். உன்னால் தான் முருக தரிசனம் பெற்றேன். தமிழ்ப் பாடல் பாடும் ஆற்றல் பெற்றேன். என்னை வீட்டுக்கு அழைக்காதே. நான் வீடுபேற்றை நாடும் மனநிலையில் இருக்கிறேன். உறவைத் துறந்து நான் துறவு பூண்டுவிட்டேன். இனி என் கால்கள் வீட்டுக்கு வராது. முருகனது ஆலயங்களுக்கே செல்லும். என் நா முருகன் திருப்புகழையே பாடும். எனக்கு ஆசி வழங்கு. தமக்கையும் தாயும் குருவுமான ஆதியைப் பணிந்தார் அருணகிரியார். தாய் முத்தம்மையின் இறுதி வேண்டுகோளை முருகன் நிறைவேற்றிவிட்டான் என உணர்ந்து ஆதி சமாதானமடைந்தாள். தம்பீ, நம் தாய் முத்தம்மையைப் போல் நானும் இனி முருக பக்தியில் ஈடுபட்டு முக்தியடைவேன்! என்றவாறே அவள் விழிகளைத் துடைத்துக் கொண்டு விடைபெற்றாள். அவ்வாறு குடும்ப பந்தம் முற்றிலுமாய்த் தன்னை விட்டு அகல அருணகிரியார் துறவியானார்.


முருகா சரணம் 🙏




No comments

Powered by Blogger.