Positive vibes Motivation daily- நிமிர்ந்து நில்
நிமிர்ந்து நில்.....
💜💜💜💜💜💜💜💜
இருக்கையில் அமரும்போது நிமிர்ந்து உட்கார்;
நடக்கும்போதும் நிற்கும்போதும்
நிமிர்ந்து நட;
நிமிர்ந்து நில்.
உன் பார்வையில் கம்பீரமும் தெளிவும் இருக்கட்டும். இவை நான் வெல்லப் பிறந்தவன் என்னும் மனப்பாங்கை ஏற்படுத்தும்.அதனால்தான் பாரதியார், நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை வேண்டும் என்றார்.
நிமிர்ந்து நிற்கையில் மனதில் தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி ஊற்றெடுப்பதை உணரலாம்.
கூனிக் குறுகி நின்றால், இவன் இலக்கு இல்லாத சோம்பேறி என்று நினைப்பார்கள்.உன்னுடைய தோற்றத்தை வைத்தே உன்னை எடைபோடுவார்கள். தலைநிமிர்ந்து நிற்பதே தலைமைக்கு அழகு. உன் தோற்றப் பொலிவும், உன் உடல் உணர்த்தும் செய்தியும் பிறர் மதிப்பதாக, மகிழ்வதாக இருக்குமாறு எப்போதும் பார்த்துக் கொள்.
நாம் பிறரால் மதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே பிறர் நம்மை மதிப்பர். நாடகத்தில் கம்பீரமாக நடந்து வரும் இராஜாவைப் பார்த்து வியக்கிறோமே ஏன்?
மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட நடை; வேறுபட்ட உடை.
அது தான் காரணம். எனவே நீயும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும். நூறு பேருக்கு நடுவே நின்றாலும் நீ அறியப்பட வேண்டும். உன்னுடைய இருப்பு மற்றவருக்குத் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு பார். நீ கொண்டாடப்படும் மனிதராக (Charismatic Personality) மதிக்கப்படுவாய்.நீ தலைவனைப் போல மதிக்கப்பட வேண்டும் என நினைத்தால், தலைவனாகவே இரு.
நீ உயர்ந்து நிற்கிறாயா, தாழ்ந்து நிற்கிறாயா என்பதை உன் மனதிடம் கேள்; பெற்றோரிடம், நண்பரிடம், உறவினரிடம் கேள். பல்வேறு சமயங்களில் உன்னை ஒளிப்படம் எடுத்திருப்பார்கள். அவற்றைத் தொகுத்துப் பார். நீ நிற்கும் விதம், நடக்கும் விதம், உட்காரும் விதம் ஒரு தலைவனுக்கு உரியதாக இல்லை என்றால், அவற்றைமாற்றிக் கொள்.
மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வண்ணம், மற்றவர்கள் உன்னை ஏற்கும் வண்ணம், மற்றவர்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் உன் ஒவ்வொரு அசைவும் இருக்க வேண்டும்.
உன் ஒவ்வொரு செயலும் துணிவு, நேர்மை, அர்பணிப்பு, அறிவு, அன்பு இவற்றைப் பறைசாற்றவேண்டும். இந்த நிலைக்கு நீ உயர்ந்தால், பல நூறு இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாக, நன்மாதிரியாக விளங்குவாய்.
சுவாமி விவேகானந்தரைப் பார்த்து ஒருவர் கேட்டார். “ஏன் நீங்கள் வித்தியாசமான மனிதராய்த் ெரிகிறீர்கள்?” அவர் திருப்பிக் கேட்டார். “ஏன் நீங்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறீர்கள்?”
சுவாமி விவேகானந்தர் படத்தின் முன்னால் நின்று சற்று உற்றுப்பார். அவர் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக நிற்பதைப்பார். அவர் நிற்கும் விதமே அவர் குறிக்கோளைப் பறைசாற்றுகிறது. நம்முடைய பாரம்பரிய ஞானத்தைப் பற்றி பெருமை கொள்ளச் செய்தவர் அவர்தான்.
கருதிய செயல் கைகூடும் வரை விழிப்புடன் பணியாற்றுமாறு அறைகூவல் விடுத்தார். சுயமரியாதையையும், நாட்டுப்பற்றையும் நம் குருதியில் கலக்கச் செய்தார். 1893-ல் நடந்த சிகாகோ சர்வமத மாநாட்டில் ஆற்றிய எழுச்சி உரை உலகப்புகழ் வாய்ந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த என் சகோதரிகளே, சகோதரர்களே – என்ற அவரது தொடக்க வரி, அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. ஆம், அவர் எப்போதும் ஓங்கி உயர்ந்து நின்றார்; வென்றார்.
Thank-you.....
No comments