பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (1706-1744) திகழ்ந்த பெரியார் தாயுமான சுவாமிகள்.
திருமறைக் காட்டிலே சைவ வேளாளர் குலத்திலே கேடிலியப்பப் பிள்ளையின் இரண்டாவது மகனாய்ப் பிறந்தார்.
திரிசிரபுரத்தில் விசயரகுநாத சொக்கலிங்க நாயக்கரின் கணக்கராகத் தந்தை பணி புரிய, வட மொழி, தென்மொழி இரண்டுங் கற்ற இவர் மௌன குரு என்பாரிடம் அறிவுரை பெற்றார்.
தந்தையார் இறந்தவுடன் அரசு வேலையிலமர்ந்தார்; நாயக்கர் இறந்த பின் அரசி மீனாட்சி தன்பாற் காட்டிய முறையற்ற அன்பு காரணமாக ஒரு நாளிரவு ஊரை விட்டோடினார்.
இராமநாதபுரத்தில் தன் தமையனோடு இருந்தார். அவர் கட்டாயப்படுத்தியதால் மட்டுவார்குழலி என்ற பெண்ணை மணந்தார். கனகசபாபதி எனும் ஆண்குழந்தை ஈன்ற மனைவி மறையவே யோகஞானங்களில் சிறக்கத் துறவு பூண்டார். சைவ சித்தாந்தம், அத்வைதம் ஆகிய இரு நிலைக்கும் ஒரு வகை சமரசம் கண்டவர்.
‘உபநிடதக் கருத்துகளையும் மற்ற ஞான நூல்களின் உட்பொருளையும் மிகத் தெளிவாகத் தமிழில் பாடியவர்’ என பேராசிரியர் மு.வரதராசனார் இவரைப் பாராட்டுகிறார். இவரது பாடல்கள் தமிழ்மொழியின் உபநிடதம் எனப்படுகின்றன.
No comments